TAMIL CINEMA

Tuesday, January 26, 2016

தாரை தப்பட்டை – திரை விமர்சனம்

                       தாரை தப்பட்டை – திரை விமர்சனம்


தஞ்சாவூரில் கரகாட்ட குழு நடத்தி வருகிறார் சசி குமார். இந்த குழுவில் நடனமாடி வருகிறார் வரலட்சுமி. இவர் சசிகுமாரை காதலித்து வருகிறார். ஆனால், சசிகுமாரோ வரலட்சுமி மேல் காதல் இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லாமலே சுற்றி வருகிறார்.

வரலட்சுமியின் ஆட்டத்தால் சசிக்குமாரின் கரகாட்ட குழுவிற்கு பல வாய்ப்புகள் வருகிறது. இந்நிலையில் உதவி கலெக்டருக்கு டிரைவராக இருக்கும் சுரேஷ், வரலட்சுமியை உயிருக்கு உயிராக காதலிப்பதாக வரலட்சுமியின் அம்மாவிடம் கூறுகிறார்.

இதையறியும் வரலட்சுமியின் அம்மா, தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென நினைத்து, சசிகுமாரை விட்டுக்கொடுக்கச் சொல்லுகிறார்.

அவரும் வேறு வழியில்லாமல், வரலட்சுமியை வெறுப்பதுபோல் விரட்டியடித்து, ஆர்.கே. சுரேஷை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வரலட்சுமியிடம் சத்தியமும் வாங்குகிறார்.

பின்னர், வரலட்சுமிக்கும், ஆர்.கே. சுரேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு சசிக்குமாரின் கரகாட்டக் குழு பொருளாதார நெருக்கடியில் சிக்குகிறது. மேலும் திருமணமாகி போன வரலட்சுமியும் எங்கு வசிக்கிறாள் என்று தெரியாத நிலை ஏற்படுகிறது.

இறுதியில், சசிக்குமார் கரகாட்ட குழுவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டாரா? வரலட்சுமிக்கு என்ன ஆனது? அவரை தேடி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சன்னாசியாக நடித்திருக்கும் சசிக்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து மிக இயல்பாக நடித்திருக்கிறார். இவர்தான் கதாநாயகன் என்றாலும், இவரையும் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி.

சூறாவளி என்னும் கதாபாத்திரத்தில் சசிக்குமாரை விரட்டி விரட்டி காதலிப்பது, தன்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களை கோபப்பட்டு அடித்து நொறுக்குவது என சூறாவளியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி.

கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்திருக்கிறார். வரலட்சுமியின் நடிப்புக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.

ஸ்டுடியோ 9 தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். பாலா படங்களில் வில்லன்கள் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும்.

அதுபோல், சுரேஷின் கதாபாத்திரமும் பேசும் படமாக அமைந்திருக்கிறது. சுரேஷ் மீது வெறுப்பு வரும் அளவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். சசிகுமாரின் அப்பாவாக வரும் ஜி.எம்.குமார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையையும், அவர்கள் சந்திக்கும் வலியையும் மையப்படுத்தி இயக்குனர் பாலா ஒரு கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் செல்லும் அனைவருக்குமே இப்படம் மிகப்பெரிய ஏமாற்றம்.

யாருக்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடிய ஒரு கதையை, நாட்டுப்புறக் கலைஞர்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் பாலா. இது பாலாவின் வழக்கமான படங்கள் வரிசையில் அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடம் சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள், பின்னணி இசையை அவருக்கே உரிய பாணியில் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். செழியனின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.


மொத்தத்தில் ‘தாரை தப்பட்டை’ சிறப்பு.

No comments:

Post a Comment

google98dbb8b5f3166a6a.htmlhttps://pushpad.xyz/projects/122/subscription/edithttp://latesttamilcinemakollywoodnews.blogspot.in/